சென்னை மழைநீர் வடிகால் பணியில் தொய்வு; ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
|குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காததால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கீ.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கவும், பணி நடைபெறும் இடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றி பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருசில இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காததால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணிகளை மேற்கொண்டு வரும் 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்காத காரணத்திற்காக இரண்டு நிறுவனத்திற்கு காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.