திண்டுக்கல்
புதிய நடைமுறையால் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் காலதாமதம்
|வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதிய நடைமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய 4 இடங்களில் பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்தும், ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற பிறகும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றும் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு உரிமம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் வாகனங்கள் ஓட்டி பழகியவர்கள் உரிமம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மற்றும் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை கடந்த 5-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காலதாமதம்
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வீரமணி, செயலாளர் அர்ச்சுனன், பொருளாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 85-க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் திண்டுக்கல்லில் மட்டும் 31 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.
குறிப்பாக ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு மாத காலம் வாகனம் ஓட்ட பயிற்சி அளித்தபின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் பெறுவதற்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமத்தை நாங்கள் பெற்று தருகிறோம். இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால் இந்த , புதிய நடைமுறையால் இதுவரை சுமார் 500 பேர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். பொதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தாமாக முன்வந்து ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. அவர்களுக்காக ஒதுக்கிய 3 வேலை நாட்கள் அதிகம். அதற்கு பதிலாக பயிற்சி பள்ளிகளுக்கு அதிக நாட்கள் ஒதுக்கலாம். இதனால் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மேலும் புதிய நடைமுறையால் அரசுக்கு தற்போது வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க பழைய நடைமுறையை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
காத்திருப்பு பட்டியல்
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஓட்டுனர் உரிமம் பெற வந்தவர்களிடம் ஏற்படும் சிரமங்கள் குறித்து கேட்கப்பட்டது.
திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த நடேசன்:- ஓட்டுனர்பயிற்சி பள்ளியில் வாகனத்தை ஓட்டி பயிற்சி பெற்றபின், அதே பயிற்சி பள்ளியின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. அவ்வாறு பதிவு செய்த பின் உடனடியாக ஓட்டுனர் உரிமம் பெற முடியவில்லை. 15 நாள் காத்திருப்பு பட்டியலில் வைக்கின்றனர். அதன்பிறகு தான் உரிமம் எடுக்க முடிகிறது. இந்த தாமதத்திற்கு காரணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு உரிமம் பெற்றுத்தர வாரத்தில் 2 நாள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணத்தால் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும்.
திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்:- வாகனம் ஓட்டுவதற்கு பழகுனர் உரிமம் பெற்ற 30 நாட்களுக்குப் பின் ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போது கடைபிடித்து வரும் நடைமுறையால் உடனடியாக ஓட்டுனர் உரிமம் பெற முடியவில்லை. அதனால் என்னை போன்றவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் உடனடியாக பணிக்கு செல்ல முடியவில்லை. இது போன்ற தாமதத்தை தவிர்க்க ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் ஒதுக்கி ஓட்டுனர் உரிமம் பெற அனுமதிக்க வேண்டும்.