கள்ளக்குறிச்சி
மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் குறைபாடு
|கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் மீது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்
கள்ளக்குறிச்சி
அதிகாரிகளிடம் விசாரணை
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணம் பற்றிய விசாரணை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மாணவியின் இறப்பு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) விஜய் கார்த்திக்ராஜ், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, சமூக நல அலுவலர் தீபிகா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, டாக்டர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், குழந்தைகள் நல குழு தலைவர் ரவிச்சந்திரன், நன்னடத்தை அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மாணவியன் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரிகள் கவனக்குறைவு
மாணவி ஸ்ரீமதியின் இறப்பு குறித்து அவரது பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்திய பின் சம்பவம் நடந்த பள்ளியிலும், விடுதியிலும் ஆய்வு செய்தோம். இதையடுத்து மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுள்ளோம்.
இச்சம்பவத்தை முதற்கட்டமாக விசாரணை நடத்திய காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை அதிகாரிகள், டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம்.
இதன் மூலம் பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல்பட்டிருப்பதோடு, மாணவர்களுக்கு அடிப்படை வசதியில் குறைபாடுகள் உள்ளதை குறிப்பெடுத்துள்ளோம்.
மாணவி உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் சில குறைபாடுகளும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம். விசாரணை அறிக்கையை மத்திய-மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.