மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்
|மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்த வேண்டும் எனவும், அண்ணா குறித்து அவர் பேசிய பேச்சுக்கு கண்டத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரித்தார்.
சென்னை,
அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா தன்னுடைய பேச்சாற்றல், எழுத்தாற்றலால் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர். அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் உள்துறை மந்திரி அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அ.தி.மு.க.வினர் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதற்கும், அமித்ஷா உடனான சந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழங்காலுக்கும், மொட்டை தலைக்கும் முடிச்சு போட வேண்டாம். அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு துறையினர் அ.தி.மு.க.வினர் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. தொகுதி பங்கீடு பற்றி இப்போது எதுவும் அமித்ஷாவிடம் பேசவில்லை.
அண்ணாமலைக்கு கண்டனம்
அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய பேச்சுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்தெழும் நிலையில் உள்ளனர். தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு அவர் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அவர் கைவிட வேண்டும். ஏற்கனவே ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்தார். அப்போது, கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து மன்னிப்பு கேட்டு அப்படி நான் எதுவும் சொல்லவில்லை என்றார். அண்ணா உலகத்தலைவர்களால் போற்றப்படும் ஒரு தலைவர். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் நடக்காத ஒரு சம்பவத்தை கூறி அண்ணாமலை பேசியுள்ளார்.
பதிலடி கொடுப்போம்
முத்துராமலிங்க தேவரும், அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய ஆட்சி காலத்தில் முத்துராமலிங்க தேவரை நினைவு கூரும் வகையில் பல உத்தரவுகள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்து இதுபோன்ற கருத்தை தெரிவித்தார்? எதுவுமே தெரியாமல் இதுபோன்ற கருத்தை தெரிவித்ததற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதற்காக எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து அவர் இதுபோன்று பேசினால் அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் மேடையில் பேசியுள்ளார். அண்ணாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவதை நிச்சயம் ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.