கவர்னர் குறித்து அவதூறு பேச்சு - திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு
|ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது.
சென்னை,
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்தார். அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கவர்னரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் போடப்பட்டுள்ளது. கவர்னரின் செயலாளர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.