< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரி எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

மத்திய மந்திரி எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
6 Sept 2023 5:46 AM IST

முரசொலி அறக்கட்டளை நிலம் குறித்து பேசியது தொடர்பாக மத்திய மந்திரி எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. செயலாளர் சீனிவாசன் புகார் செய்தார். இந்த புகாரை ஆணையத்தின் அப்போதைய துணை தலைவர் எல்.முருகன் விசாரித்தார். பின்னர், இவர் மத்திய மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

இதற்கிடையில், பா.ஜ.க., மாநில தலைவராக எல்.முருகன் பதவி வகித்தபோது, 2019-ம் ஆண்டு வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பேசினார்.

அவதூறு வழக்கு

அப்போது, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த நிலத்தின் மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பி சில கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் எல்.முருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

தள்ளுபடி

முரசொலி அறக்கட்டளை குறித்து மனுதாரர் எல்.முருகன் அளித்த பேட்டி, அனைத்து ஊடகங்களிலும், மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது. இதுபோன்ற கருத்தை நேர்மையாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கருத்துக்கூற அவருக்கு அரசியல் சட்டத்தின்படி உரிமை உள்ளது என்றும் வாதிடப்பட்டது.,

ஆனால், இதையெல்லாம் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையின் மூலமே உறுதி செய்ய முடியும். அதனால், எல்.முருகன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரர் மீதான இந்த வழக்கை 3 மாதத்துக்குள் சிறப்பு கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்