எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு
|கோவை கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை,
கோவையை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி (வயது 64). முன்னாள் எம்.பி.யான இவர் கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். 1982-ம் ஆண்டில் அ.தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1984-ம் ஆண்டு காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். 1989-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை மீண்டும் ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, அவரிடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக நிருபர்கள் கேள்விகேட்டபோது, ரோட்டில் போகிற வருகிறவர்கள் குழு அமைத்தால் அதை கேள்வியாக கேட்கிறீங்க, அவர் கட்சியில் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதுபோய் சேர்ந்தார். அவரெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு நினைத்து நீங்க கேக்குறீங்க என்று கூறியுள்ளார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியிருந்தது.
இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோபாலகிருஷ்ணன், வழக்கு மீதான சாட்சி விசாரணையை நாளை (புதன்கிழமை) நடத்த உத்தரவிட்டார்.