பேராயருக்கு எதிராக அவதூறு: கொடைக்கானல் போலீசார் விசாரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|பேராயருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்பாக கொடைக்கானல் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மரிய செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது தாத்தா பாப்புசாமி, ராணுவத்தில் பணியாற்றியவர். எங்களின் தாய்மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக உள்ளார். மக்கள் பேராயர் என அனைவராலும் புகழப்படுபவர்.
இந்த நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில், கொடைக்கானலில் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் பல தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்தியை உள்நோக்கத்துடன் சிலர் பரப்பியுள்ளனர். மத கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே இது சம்பந்தமாக கொடைக்கானல் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை குறித்த அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.