மகாராணி எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராணி எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"ஐக்கிய இராஜ்ஜியத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய கண்ணியம், பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்.
எல்லா காலத்திலும் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரின் மறைவுக்கு துக்கத்தில் இருக்கும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ராயல் குடும்பத்தினருக்கும் இங்கிலாந்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.