மதுரை
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி
|உலககோப்பை தொடரில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வெற்றிகண்டு, இந்தியா தித்திப்பு வெற்றியை பெற்றுள்ளது, இதை கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கான இரட்டை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.
உலககோப்பை தொடரில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வெற்றிகண்டு, இந்தியா தித்திப்பு வெற்றியை பெற்றுள்ளது, இதை கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கான இரட்டை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.
இதுபற்றி ரசிகர்களின் கருத்து வருமாறு:-
கல்லூரி மாணவி
மதுரை போடிநாயக்கன்பட்டி கல்லூரி மாணவி காவியா:-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாகத்தான் இருக்கும். நேற்றைய போட்டியும் அப்படித்தான். ஆனால் நேற்று இந்திய அணியின் பேட்டிங் தொடக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்ததுதான் காரணம். பின்னர் மெல்ல மெல்ல ரன்கள் அதிகரித்தன. கடைசி 4 ஓவர்கள் வழக்கத்தை காட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தின. அடுத்து என்ன நடக்கப்போகிறது, இந்திய அணி ஜெயிக்குமா? சந்தோஷமான தீபாவளியாக இன்றைய தினம் இருக்குமா? என்ற எண்ணம்தான் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றாற்போல திடீரென விக்கெட் வீழ்ந்தது. கடைசி பந்தில் அஸ்வின் 4 ரன்கள் எடுத்த உடன், அப்பாடா... ஜெயித்துவிட்டோம்.... தீபாவளியை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடுவோம் என சந்தோஷத்துடன் கூடிய நிம்மதி ஏற்பட்டது. நிச்சயம் போட்டி திரில்தான். கோலி, ஹர்திக் பாண்ட்யா தில்தான்.
காரைக்குடியை சேர்ந்தவர்
காரைக்குடியை சேர்ந்த சிங்கமுத்து:-
கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி வெற்றி கண்டது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றி இந்திய மக்களுக்கு தித்திக்கும் இரட்டை தீபாவளி பரிசாக அமைந்து உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இனிவரும் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி உலக கோப்பையை மீண்டும் நிச்சயமாக கைப்பற்றும்.
கிரிக்கெட் வீரர்
ராமேசுவரம் கிரிக்கெட் வீரர் சண்முகம்:- முதல் 6 ஓவரில் இந்திய அணியின் விளையாட்டை பார்த்த போது வெற்றி பெறுவது கடினம் என்றுதான் நினைத்தேன். ஆனால் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரின் விளையாட்டு மெல்ல மெல்ல வேகம் எடுக்க தொடங்கியது. இந்தியா வெற்றி பெறும் என முதலில் நினைக்கவில்லை. ஆனால் இருவரும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. உண்மையாகவே மகிழ்ச்சியாகவே உள்ளது. ஆட்டத்தின் கடைசி பந்தில் இதயத்துடிப்பு எகிறிவிட்டது.
ராமநாதபுரம் வினோத் கண்ணன்:- முதல் 10 ஓவரில் இந்திய அணியின் ரன் 4 விக்கெட்டுகளை இழந்து குறைவாகவே இருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவரில் விராட் கோலி மற்றும் ஹர்திக்பாண்ட்யா இருவரின் விளையாட்டு எதிர்பார்த்ததை விட மிக மிக சிறப்பாகவே இருந்தது. வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு சிறப்பான வெற்றி. இந்த வெற்றியின் மூலம் தீபாவளி பண்டிகையை இன்னும் சிறப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடுவோம்.
கிரிக்கெட் வீரர் மூர்த்தி்:- இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் விறுவிறுப்புதான். அதிலும் உலக கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் விளையாடுவதை பார்க்கும் போது இன்னும் கூடுதலாகவே விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இந்த போட்டி எதிர்பார்த்ததை விட மிக மிக ஒரு திரில்லான போட்டியாகவே இருந்தது. முதல் 10 ஓவரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்கும்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதன் பின்னர் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா இருவரின் சிறப்பான விளையாட்டு இந்தியா வெற்றி பெறுவதற்கு சாதகமாக இருந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த தீபாவளியை கூடுதல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் என்றே சொல்லலாம்.
சிவகாசி
சிவகாசி முத்துராஜ்:-
இந்தியா வெற்றி பெற சவாலான இலக்கு இருந்த நிலையிலும் மிக சாமர்த்தியமாக இந்திய வீரர்கள் விளையாடி வெற்றியை பாகிஸ்தானிடம் இருந்து தட்டி பறித்தனர். தீபாவளி திருநாளை கொண்டாடும் இந்த நிலையில் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றதையும் இந்திய ரசிகர்கள் சேர்ந்தே கொண்டாடுவார்கள்.