< Back
மாநில செய்திகள்
பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது
மாநில செய்திகள்

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது

தினத்தந்தி
|
26 Sept 2024 2:37 AM IST

சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

சென்னை,

சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். கடந்த 2021-ம் ஆண்டு இவர், தென்சென்னை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரவீந்திரநாத் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்பு அவரை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் சேலம் சென்றனர். சேலத்தில் தனது வீட்டில் இருந்த ரவீந்திரநாத்தை அங்கிருந்து போலீஸ் வேனில் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. புருஷோத்தமன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மேலும் செய்திகள்