மின் விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம்: மின்வாரியம் எச்சரிக்கை
|மின் விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்விபத்துக்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் புகைப்படத்தை பணிக்கு முன்னதாக டிஎன்இபி பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் விபத்துகள் தொடர்கின்றன. இது தொடர்பான மாதாந்திர ஆய்வில், விபத்து நேரிட்ட பகுதிகளில் புகைப்படங்களை செயலியில் பதிவு செய்யவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
மின்வாரிய செயலியில் புகைப்படத்தை பதிவு செய்யாத நேர்வில் உயிரிழப்புகள் ஏற்படும் பட்சத்தில் கண்காணிப்பாளருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். குறிப்பாக கட்டாய ஓய்வு, இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனைக்கு சம்பந்தப்பட்டவர் ஆளாக்கப்படுவார். உயிர் என்பது மிக முக்கியமான ஒன்று. எனவே, பாதுகாப்பில் கவனம் செலுத்தி வழிகாட்டுதல்களை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.