பெரம்பலூர்
பெரம்பலூரில் 26-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
|பெரம்பலூரில் 26-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை சிலிண்டர் உயர்வை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் கூட்டு இயக்கத்திற்கான ஆலோசனை கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் வீரசெங்கோலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வை மொத்தமாக திரும்பப்பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் வருகிற 26-ந் தேதி புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது. ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.