பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு: கிளம்பிய எதிர்ப்பு... காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
|காதலர்களின் திருமணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 25 வயது வாலிபர், சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். அதேபோல் பரமக்குடி பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் காதல்ஜோடி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். அதற்காக பலமுறை தங்கள் பெற்றோரிடம் கேட்டுள்ளனர். ஆனாலும் திருமணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் மனவருத்தம் அடைந்த காதல்ஜோடி, தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவு எடுத்துள்ளனர். மேலும் இருவரும் ஒரே நேரத்தில் அவரவர் வீடுகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது எனவும் முடிவெடுத்து இருந்ததாக தெரியவருகிறது. அதன்படி நேற்று மதியம் இருவரும் அவரவர் வீட்டில் ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, வாலிபர் மற்றும் இளம்பெண்ணின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதல்ஜோடி அவரவர் வீடுகளில் ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.