புதுக்கோட்டை
குற்றவாளிகளை கைது செய்ய உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு?
|வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குடிநீர் தொட்டியில் அசுத்தம்
புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார், வேங்கைவயல் கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களை திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அசுத்தத்தை கலந்தவர்களை கைது செய்யவில்லை.
உண்மை கண்டறியும் சோதனை
இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ''தற்போதைக்கு அதுபற்றி எந்த முடிவும் இல்லை. தேவைப்பட்டால் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படலாம்'' என்றார்.