< Back
மாநில செய்திகள்
அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச முடிவு: சென்னையில், மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை
மாநில செய்திகள்

அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச முடிவு: சென்னையில், மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தினத்தந்தி
|
3 Aug 2022 12:59 PM IST

சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டு, மழைக்காலத்துக்கு முன்பாகவே பணிகளை விரைவில் முடிக்கக்கோரி உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நேரடி ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். தென்சென்னை பகுதிகளை முடித்து, வடசென்னை பகுதிகளுக்கு வந்திருக்கிறோம். இங்கு கொசஸ்தலை ஆற்றுப்பகுதிகளில் 40 சதவீதம் பணிகள் முடிந்திருக்கிறது. 2023-ம் ஆண்டு வரை இப்பணிகள் முடிக்க காலக்கெடு இருக்கிறது.

மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை பகுதிகளில் மழைநீர் வடிகால்களுக்காக வாய்கால்கள் தோண்டும்போது பெரும் சிரமம் இருக்கின்றது. மரங்கள், மின்கம்பங்கள் அதிகமாக இருப்பதால் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பணிகளை விரைவாக முடிக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தந்தாரர்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர் ஆகியோரை அழைத்து பேச முடிவு செய்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான கூட்டம் நடத்தப்படும். மழைநீர் வடிகால்வாய் பணிகளுடன், பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளையும் சேர்த்து கவனித்து வருகிறோம்.

பெருமழை காலத்தில் ரிப்பன் மாளிகையில் தண்ணீர் தேங்குகிறது. சென்டிரலில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்திருப்பதால், அந்த நீர்வழித்தடம் அடைப்பட்டிருக்கிறது. இதனாலேயே தண்ணீர் தேங்குகிறது. இந்தநிலை இனி கூடாது என்ற வகையில் ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் ரூ.26 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளும் 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது.

அடையாறு, கொசஸ்தலை கால்வாய் பகுதிகளில் 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. உலக வங்கி நிதியுதவி மூலம் நடந்து வரும் பணிகள் 70 முதல் 80 சதவீதம் வரை முடிந்துள்ளது. பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை எடுத்துக்கொண்டு கவனிப்பதால் சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இப்பணிகள் முழுமையடையும். ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளார்கள். இதுகுறித்தும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்