பெரம்பலூர்
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு
|பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்களுடனான கூட்டம் நடந்தது. இதற்கு ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தை டிசம்பர் 5-ந் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. 130 நாட்கள் அரைப்பது எனவும், 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பை அரைப்பது என்றும், 9.75 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பூஞ்சாண நோயால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் வரை கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட பதிவு செய்யப்படாத கரும்பையும் அரவைக்கு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற 21-ந்தேதி ஆலையில் கரும்பு அரவைக்கான சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கு வெட்டும் கரும்புக்கு கொடுக்கும் வெட்டுக்கூலியாக முன்பணம் தொகை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இணைமின் திட்டத்திற்கு பிடித்தம் செய்த பங்கு தொகைக்கான பங்கு பத்திரத்தை வழங்காததால், வரும் பேரவை கூட்டத்திற்குள் பங்குத்தொகையையும் அதற்கான வட்டியையும் வழங்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால் கரும்பு ஏற்றும் டிராக்டர்களுக்கு டீசல் போடுவதற்கு தொகையை உயர்த்தி தரவேண்டும். வருவாய் பங்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆலையின் முகப்பில் இருந்து எடை மேடை வரை உள்ள மோசமான சாலையை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். கூடுதல் எடை மேடை அமைக்க வேண்டும். சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். இந்த ஆண்டுக்கு 450 டிராக்டர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆலை அரவை கடைசி நேரத்தில் கரும்புகள் தேக்கமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான தொகையை தாமதமடைவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.