கடன் பிரச்சினை: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
|வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதி ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 46). இவருடைய மனைவி ஹசீனா (39). இவர்களுடைய மகள்கள் ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (13). இதில் ஆயிஷா பாத்திமா 11-ம் வகுப்பும், ஜனா பாத்திமா 8-ம் வகுப்பும் கருங்கல்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.
ஜாகீர் உசேன் காலை நேரத்தில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரமும், மற்ற நேரங்களில் பேக்கரி, ஓட்டல்களில் சமையல் வேலை மற்றும் பேக்கரி உணவு பொருட்கள் தயார் செய்து கொடுக்கும் பணியும் செய்து வருகிறார். இவர் தொழில் தொடங்குவதற்காக தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் ஹசீனாவும் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் ஜாகீர் உசேனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடன் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஜாகீர் உசேன் வேலைக்கு சென்று விட்டார். தாய், தந்தை சண்டை போட்டதால் ஆயிஷா பாத்திமாவும், ஜனா பாத்திமாவும் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தனர்.
மேலும் கடன் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக ஹசீனா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்த அவர் தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட திட்டமிட்டார்.
இதனால் மனதை கல்லாக்கி கொண்டு ஹசீனா நேற்று மாலை தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களை மெத்தையில் படுக்க வைத்தார். பின்னர் பக்கத்து அறைக்கு ஹசீனா சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் ஜாகீர் உசேன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது போனை ஹசீனா எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று ஹசீனாவை பார்க்கும்படி கூறி உள்ளார்.
இதையடுத்து முதல் மாடியில் வசிக்கும் அவர் கீழே இறங்கி வந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது ஆயிஷா பாத்திமாவும், ஜனா பாத்திமாவும் வாயில் நுரை தள்ளியபடி எந்தவித அசைவுமின்றி மெத்தையில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஹசீனா, ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா ஆகிய 3 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் பிரச்சினையால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.