கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன - அண்ணாமலை
|கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக் கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மது வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது.
கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன. இந்த போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் இந்தத் துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுக் கடையின் முன்பு தமிழக பாஜக தொண்டர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.