கள்ளக்குறிச்சி விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
|கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் 7 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.