< Back
மாநில செய்திகள்
ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே கோவில் திருவிழாவில் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாக தெரிகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் உடனே ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், இதுபோன்று ஆபாசமாக நடனம் ஆடுவதற்கு அனுமதி வழங்கமுடியாது என தெரிவித்தனர்.

வாக்குவாதம்

அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான குமாரசாமி மகன் ராமன் (வயது 48), ஒருங்கிணைப்பாளரான விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் மதன் (32), எரவார் வடக்கு காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த சேகர் மகன் பிரபாகரன் உள்ளிட்டோர் போலீசாரிடம், அப்படிதான் ஆபாசமாக நடனம் ஆடுவார்கள். இதை நீங்கள் தடுக்கக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ராமன், மதன், பிரபாகரன் மற்றும் ஆபாசமாக நடனம் ஆடிய தொல்காப்பியன் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரபாகரன் மின்வாரிய ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், ஆடல் பாடல் நிகழ்ச்சியை ஆபாசமாக நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்