காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை
|இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வாலிபர் தப்பியோடினார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ஐங்காமம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக இவர் தினமும் வீட்டில் இருந்து நடந்து களியக்காவிளை பஸ் நிலையம் சென்று பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்கும்படி மிரட்டி வந்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் காதலிக்க மறுத்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றும் இளம்பெண்ணிடம் அந்த வாலிபர் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் இளம்பெண்ணை தாக்க முயற்சித்துள்ளார். இதனால் பயந்த அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.