ரூ.20 லட்சம் கேட்டு ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் - 7 பேர் கைது
|ஊராட்சி மன்றத் தலைவரிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
தென்காசி அடுத்த கிழக்காடு ஊராட்சி மன்றத் தலைவரிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உள்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிழக்காடு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள சந்திரசேகருக்கும், தென்காசி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரான கண்ணனுக்கும் ஏற்கனவே உள்ளாட்சி தொடர்பான மோதல் இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு 11 மணிக்கு வீட்டிலிருந்த சந்திரசேகரை மர்மகும்பல் ஒன்று சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இது தொடர்பான புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கண்ணன் உட்பட 7 பேரை கைது செய்தனர். பெண் ஒருவரிடம் சந்திரசேகர் நெருக்கமாக பேசியதாக கூறப்படும் வீடியோ, ஆடியோவை காட்டி மிரட்டி அவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கண்ணன் மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது.