< Back
மாநில செய்திகள்
2 ஆசிரியைகளின் நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க குற்றப்பத்திரிகை நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாய், கோர்ட்டில் மனுதாக்கல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

2 ஆசிரியைகளின் நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க குற்றப்பத்திரிகை நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாய், கோர்ட்டில் மனுதாக்கல்

தினத்தந்தி
|
5 Jun 2023 6:45 PM GMT

2 ஆசிரியைகளின் நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க குற்றப்பத்திரிகை நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாய், கோர்ட்டில் மனுதாக்கல் செய்தாா்.


கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இந்த மாணவி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஜூன் 5-ந் தேதி(அதாவது நேற்று) நேரில் ஆஜராகும்படி ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ரத்தினம், கேசவன் மற்றும் வக்கீல்கள் லூசியா, காசிவிஸ்வநாதன், புஷ்பதேவன் ஆகியோருடன் செல்வி நேற்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம், ஸ்ரீமதி மற்றும் அவரது மாமா செல்வம் ஆகியோர் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, ஸ்ரீமதியின் தாய் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு முறையாக வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்