பள்ளி மாணவி மரணம்: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
|பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி ஸ்ரீமதியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது