காவல்துறையின் மோப்பநாய் டாபர்மேன் மறைவு - 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி
|காவல் துறையில் பணியாற்றிய டாபர்மேன் என்கிற மோப்பநாய் இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது.
திருவள்ளூர்:
காவல் துறையில் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன் (மோப்பநாய்), இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. டோனி சுமார் 8 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளது. சென்னை மாநகர காவல் மோப்ப நாய்பிரிவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டோனி, சென்னை மாநகர காவலில் இருந்து பிரிந்து 02.05.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.
டோனி 20.02.2014 அன்று பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, ஒரு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றி உள்ளது. மேலும் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.
2017 ஆம் ஆண்டில், டோனி மாநில அளவில் காவல் துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. மேலும் 2020ல் அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப்மீட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. ஆவடி காவல் ஆணையாளர் த.சந்தீப் ராய் ரத்தோர் டோனியின் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்து நன்றியை தெரிவித்தார்.
ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள் மற்றும் டோனியின் பயிற்சியாளர் தலைமை காவலர் தனசேகர் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் டோனியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.