< Back
மாநில செய்திகள்
பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2023 3:23 PM IST

பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெரு பகுதியை சேர்ந்தவர் உதயராஜ் (வயது 28). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

கர்ப்பமான ராஜேஸ்வரி சின்ன காஞ்சீபுரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியான ராஜேஸ்வரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர் சின்ன காஞ்சீபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பிரசவம் பார்த்த நிலையில் திடீரென உடல் நலம் குன்றியதால் உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடைபெற்ற பிரசவத்தில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் உயிரிழந்தது. மேலும், ராஜேஸ்வரியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் சின்ன காஞ்சீபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காததால் ராஜேஸ்வரியும், குழந்தையும் உயிரிழந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சையளிக்காததால் தான் தாயும், மகளும் உயிரிழந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுகாதார நிலையம் முன்பாக திடீரென மறியிலில் ஈடுபட முயன்றனர்.

சாலை மறியல் முயற்சி காரணமாக திருக்கச்சி நம்பிகள் தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்