< Back
மாநில செய்திகள்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
மாநில செய்திகள்

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைப்பு

தினத்தந்தி
|
27 Nov 2023 9:50 PM IST

பெண் நோயாளி உயிரிழப்புக்கும், மின் தடைக்கும் தொடர்பு இல்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி அமராவதி (வயது 48).இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். அமராவதிக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து அமராவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெண் நோயாளி உயிரிழப்பு குறித்த திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளி உயிரிழப்புக்கும், மின் தடைக்கும் தொடர்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்