செங்கல்பட்டு
பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கிய மத்திய மந்திரி
|பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19-ந்தேதி மரணம் அடைந்தார். இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது. அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முன்னதாக கோவில் அருகே உள்ள பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பங்காரு அடிக ளாரின் மனைவி லட்சுமி அம்மாள் மற்றும் அவரது இளைய மகன் செந்தில்குமாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி அளித்த இரங்கல் கடிதத்தை வாசித்து காட்டி அவர்களிடம் வழங்கினர்.
இதையடுத்து நிருபர்களை சந்தித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன், 2 நாட்களுக்கு பா.ஜ.க. சார்பில் பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம், தற்போது பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நட்டா ஆகியோர் இரங்கலை பதிவு செய்தனர். நரேந்திர மோடி, பங்காரு அடிகளார் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நரேந்திர மோடி சென்னை வந்தபோது பங்காரு அடிகளார் ஆசிர்வாதம் வழங்கினார். பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறுகையில்:-
பங்காரு அடிகளார் தற்போது நம்முடன் இல்லை. எதிர்பாராத இந்த சம்பவம் விபத்து போல ஆகிவிட்டது உடல் நோய்வாய்பட்டு இருந்திருந்தால் கூட இந்த வலி இருக்காது எதிர்பார்க்காத விபத்து போல் ஆகிவிட்டது. நான் மகனாக வந்து அம்மாவுக்கு ஆறுதல் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.