< Back
மாநில செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 3 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம்:சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு விசாரணை
மதுரை
மாநில செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 3 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம்:சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு விசாரணை

தினத்தந்தி
|
3 Oct 2023 2:19 AM IST

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை உயர்மட்டக்குழு மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.


மதுரை அரசு ஆஸ்பத்திரி

தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு மகப்பேறு சிகிச்சைக்கு தனி வளாகம் செயல்பட்டு வருவதால், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிகள் வருகின்றனர். அதன்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினமும், 70-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது.

இந்தநிலையில், கடந்த மாதம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணிகள், பிரசவத்தின் போது உயிரிழந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினர், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் கவனக்குறைவால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். இதுேபால் கர்ப்பிணிகள் உயிரிழந்த பிறகு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை ஆவணங்களை திருத்தியதாகவும் தெரிய வருகிறது. இந்த புகார் குறித்து மாவட்ட கலெக்டருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, கடந்த 29-ந்தேதி மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் போது உயிரிழந்தார்.

உயர்மட்ட குழு விசாரணை

அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து சுகாதாரத்துறை உயர்மட்ட குழு நேற்று மதுரை வந்தது. பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், மருத்துவ கல்வி துணை இயக்குனர் சாந்தாராம், தேசிய சுகாதார திட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கர்ப்பிணிகள் தொடர் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதைதொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி டீன், மருத்துவமனை அதிகாரிகள், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி சுகாதார அலுவலரை பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம்- அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி, நகர்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்குபின், கடந்த 29-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அவர் இறந்து விட்டார். இந்த விவகாரத்தில், மாநகராட்சியின் சுகாதார அலுவலர் வினோத், ஆஸ்பத்திரியின் மகப்பேறு துறையில் ஆவணங்களை திருத்தி இருக்கிறார். இறந்த பெண்ணின் உடலில் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளார். பிரசவத்தின் போது ஒருவர் இறந்து விட்டால், அதுகுறித்து விசாரணை நடத்த தணிக்கை குழு இருக்கிறது. அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால், தணிக்கை குழுவிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் அரசு ஆஸ்பத்திரி பெயரை கெடுக்கும் வகையில் நடந்துள்ளார். அவரை பணிநீக்கம் செய்யக்கோரி, கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறும் அனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், குடும்ப நல அறுவை சிகிச்சைகளை நிறுத்துவது எனவும், அதற்குள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் மீண்டும் பொதுக்குழு கூட்டம் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்