விழுப்புரம்
விழுப்புரம் அருகே உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதால் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
|விழுப்புரம் அருகே உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதால் பரபரப்புஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மகன் சுரேஷ். இவர் தனது பாட்டி குப்பச்சியுடன் (வயது 89) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய தம்பி மோகன், எனது பாட்டி குப்பச்சி உயிருடன் இருக்கும்போதே 30.12.2008 அன்றைய தேதியில் இறந்து விட்டதாக கூறி ஒரு போலியான இறப்பு சான்றினை தயார் செய்ததோடு எனது தந்தையின் வாரிசு சான்றில் எனது பெயரை நீக்கிவிட்டு தாயார் கோதாவரி, தங்கை சுகன்யா ஆகியோரின் பெயர்களை மட்டும் சேர்த்து வாரிசு சான்று ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் கடந்த 30.7.2021 அன்று 2½ செண்ட் இடத்தை எனது தாய், தங்கையிடம் ஒரு பாகப்பாத்திய விடுதலைப்பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார். அந்த பாகம் பிரிக்காத இடத்தை போலி வாரிசு சான்று மூலம் மோசடி செய்துள்ளார். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே எனது தந்தை வாரிசு சான்றில் எனது பெயரை நீக்கி போலி வாரிசு சான்று அளித்துள்ள இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு அந்த பாகப்பாத்திய விடுதலை ஆவணத்தை ரத்து செய்து வாரிசு முறையில் எனக்குரிய பாகத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.