< Back
மாநில செய்திகள்
தனித்தனி சம்பவம்:    மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் சாவு
கடலூர்
மாநில செய்திகள்

தனித்தனி சம்பவம்: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் சாவு

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

தனித்தனி சம்பவத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.


நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள கொடுக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42), எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிவக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை தெற்கு காலனியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் இளவரசன்(23). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் நேற்று வீட்டின் முன்பு இருந்த பூவரசு மரத்தின் கிளைகளை வெட்டினார். அப்போது, மரத்தின் கிளை அருகே சென்ற மின் கம்பியில் விழுந்தது. இதனை அகற்ற இளவரசன் முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இளவரசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்