கள்ளச்சாராய உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
|செங்கல்பட்டில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த திருமதி.வசந்தா. க/பெ.ராஜா (வயது 50). திரு.செல்வம், த/பெ. செல்வம் (வயது 35), திரு.மாரியப்பன், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு.வள்ளியப்பன் (வயது 65) மற்றும் திருமதி.சந்திரா, க/பெ. வள்ளியப்பன் (வயது 60) ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரேம் ஆனந்த் சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் திரு.மோகனசுந்தரம், மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் த.மோ அன்பரசன் அவர்கள் முன்னதாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், உயிரிழந்தவர்களின் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.