தர்மபுரி
மாரண்டஅள்ளி அருகேமின்சாரம் பாய்ந்து கேபிள் டி.வி. உதவியாளர் சாவு
|மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து கேபிள் டி.வி. ஆபரேட்டரின் உதவியாளர் இறந்தார்.
கேபிள் டி.வி. உதவியாளர்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 50). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை நல்லூர் கிராமத்தில் வேப்பமரத்தில் சிக்கிய கேபிள் ஓயர் அறுந்து விட்டது. இதனை சரிசெய்ய ரகுபதி நல்லூர் சென்று வேப்ப மரத்தில் ஏறி கேபிள் ஓயரில் சிக்கி இருந்த கிளைகளை முறித்து வீசினார்.
விசாரணை
அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் அவருடைய கை பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மரத்தில் இருந்து கீழே விழுந்ததும் மயக்கம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ரகுபதியை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற மாரண்டஅள்ளி போலீசார் ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.