நாமக்கல்
ராசிபுரத்தில்மோட்டார் சைக்கிள் மெக்கானிக் மர்மசாவுபோலீசார் விசாரணை
|ராசிபுரம்:
ராசிபுரத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்கானிக்
ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கொத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தற்போது எந்த வேலையும் இன்றி அவருடைய தாய் லட்சுமி (70) என்பவருடன் ராசிபுரம் டவுன் பகுதியில் வசித்து வருகிறார். புதுப்பாளையத்தை சேர்ந்த கனகா (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தாயுடன் சிவக்குமார் வசித்து வந்தார். மனைவி கனகா அவரது மகள் நித்யாவுடன் புதுப்பாளையத்தில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இருந்தாலும் சிவகுமார் அவ்வப்போது மனைவியை சந்தித்து வந்தார்.
விசாரணை
இந்த நிலையில் சிவக்குமார் நேற்று காலையில் பட்டணம் ரோட்டில் தனியார் பள்ளி அருகில் உள்ள கோவில் திட்டில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கனகா ராசிபுரம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவக்குமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவக்குமார் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததால் அவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரித்து வருகின்றனர். போலீசார் சிவகுமாரின் மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.