< Back
மாநில செய்திகள்
கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

தினத்தந்தி
|
19 Jun 2023 6:45 PM GMT

திருஉத்தரகோசமங்கை கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுட்டெரித்த வெயில் காரணமா? என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

திருஉத்தரகோசமங்கை கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுட்டெரித்த வெயில் காரணமா? என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

திருஉத்தரகோசமங்கை கோவில்

ராமநாதபுரம் அருகே உள்ள புகழ் பெற்ற திருஉத்தரகோசமங்கை கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலின் சிறப்பு அம்சம் பச்சை மரகத அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தன்று இந்த பச்சை மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலின் முன்புறம் பிரமாண்ட பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது.

மீன்கள் செத்து மிதந்தன

இந்த தீர்த்த குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. குளம் முழுவதும் மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தினர் அங்கு விரைந்து சென்று அதற்கான காரணத்தை ஆராய்ந்தனர். அந்த குளத்தில் இருந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-

கடும் வெயில் காரணமாக பிரம்ம தீர்த்த குளத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டு மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம். இதுகுறித்து மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோ அளவில் மீன்கள் செத்து மிதப்பதால் அவற்றை அகற்றி வருகிறோம். மீன்கள் செத்து மிதப்பதால் குளத்தில் தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

வெயில் காரணமா?

ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-

திருஉத்தரகோசமங்கை கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் குளத்தில் ஏற்கனவே இருந்த நீரோடு புதிதாக மழை நீரோ அல்லது கழிவுநீரோ கலந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதனால் மீன்கள் செத்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

இது தவிர குளத்தில் பாசிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் அதனால் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் செத்து இருக்கலாம். சுட்டெரிக்கும் வெயிலால் அதிக வெப்பம் காரணமாகவும் ஆக்சிஜன் அளவு நீரில் குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம். இதுபோன்ற காரணங்களை உறுதியாக கண்டறியும் வகையில் நீர் மற்றும் செத்த மீன்களை பரிசோதனைக்காக எடுத்துள்ளோம். குளத்தில் உள்ள நீரினை நீர் பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். செத்து மிதந்த மீன்களை எடுத்து மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திற்கு ஆய்விற்காக அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பிறகுதான் மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்