< Back
மாநில செய்திகள்
குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

தினத்தந்தி
|
27 Sep 2022 4:25 PM GMT

சின்னாளப்பட்டியில், சாயப்பட்டறை கழிவுநீர் கலந்ததால் குளத்தில் மீன்கள் ெசத்து மிதந்தன.

சுங்குடி சேலைகள்

சின்னாளப்பட்டி என்றதும் இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலை தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு இங்கு தயாராகும் சுங்குடி சேலை நேர்த்தியாக இருக்கும். இது, 'ஏழைகளின் பட்டு' என்று வர்ணிக்கப்படுகிறது.

சுங்குடி சேலை ரகங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மவுசு உள்ளது. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்களில் 30 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைத்தவிர இங்குள்ள இளைஞர்கள் மேற்கண்ட நாடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனையும் செய்து வருகின்றனர்.

சாயப்பட்டறைகள்

நூல் நெய்தல், பிளீச்சிங் போடுதல், சாயமேற்றுதல், அயனிங் செய்தல், பிரிண்டிங் அடித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பிறகு உலக பிரசித்தி பெற்ற இந்த சுங்குடி சேலை தயாராகிறது. இதுபோன்ற அனைத்து பணிகளும் சின்னாளப்பட்டியில் நடந்து வருகிறது.

குறிப்பாக சுங்குடி சேலை உற்பத்தியில், சாயமேற்றும் பணியில் சின்னாளப்பட்டி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் ஈடுபட்டுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக கூறி அதனை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்து மிதந்த மீன்கள்

இந்தநிலையில் சின்னாளப்பட்டிக்கும், அம்பாத்துரைக்கும் இடையே அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட கரியன்கவுண்டன் குளத்தில் நேற்று மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. தண்ணீரும் பச்சை நிறமாக காட்சி அளித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சின்னாளப்பட்டி கருணாநிதி காலனியில் உள்ள சாயப்பட்டறை கழிவுநீர் நேரடியாக இந்த குளத்தில் கலப்பதால், தண்ணீர் விஷமாக மாறி மீன்கள் செத்து விட்டன என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி தலைவர் புகார்

இது குறித்து அம்பாத்துரை ஊராட்சி மன்ற தலைவர் சேகர், நேற்று சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபாவிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், சின்னாளப்பட்டி கருணாநிதி காலனி வழியாக ரசாயனம் கலந்த கழிவு நீர் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கரியன்கவுண்டன் குளத்தில் நேரடியாக விடப்படுகிறது. இதனால் தண்ணீரின் நிறம் மாறிவிட்டது. மேலும் குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் இறந்து மிதக்கின்றன.

இந்த குளத்தை சுற்றி அம்பாத்துரை கிராமத்தின் குடிநீர் தேவைக்காக 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ரசாயன கழிவுநீர் குளத்தில் கலப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே கருணாநிதி காலனியில் இருந்து வரும் ரசாயன கழிவுகள் குளத்தில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குளத்தில் ரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பசுமை இயக்கம் சார்பில் சின்னாளப்பட்டி பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டன. இதனிடையே குளத்தில் செத்து மிதந்த மீன்களை அம்பாத்துரை ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்