கடலூர்
குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
|கூனங்குறிச்சி ஊராட்சியில் குளத்தில் மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதையடுத்து தண்ணீரில் விஷம் ஏதும் கலக்கப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சி ஊராட்சியில் சவேரியார் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று காலை குளத்தில் அந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. மேலும் அங்கு துர்நாற்றமும் வீசியது.
இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜான்லியோ சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் கால்நடைதுறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீன்கள் எப்படி செத்தது? என்பது பற்றி ஆய்வு செய்தனர். குளத்தில் துர்நாற்றம் வீசியதால் தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குளத்தில் தண்ணீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்திலோ அல்லது குளத்தில் இருந்து வடிகால் வழியாக வெளியேறி கொண்டிருக்கும் தண்ணீரை ஆடு, மாடுகள் குடிக்காமல் இருக்க பொதுமக்கள் கண்காணிக்கும்படி ஊராட்சி மன்ற தலைவர் ஜான்லியோ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.