ராமநாதபுரம்
வறண்டு வரும் கண்மாயில் இறந்து கிடக்கும் மீன்கள்
|கோடை வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் ஆர்.எஸ் மங்கலம் அருகே தண்ணீர் குறைந்து வறண்டு வரும் மங்கலம் கண்மாயில் மீன்கள் இறந்து கிடக்கின்றன.
ஆர்.எஸ்.மங்கலம்
கோடை வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் ஆர்.எஸ் மங்கலம் அருகே தண்ணீர் குறைந்து வறண்டு வரும் மங்கலம் கண்மாயில் மீன்கள். இறந்து கிடக்கின்றன.
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் தற்போது கோடை கால சீசன் நடைபெற்று வருகின்றது. கோடைகால சீசன் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் 29-ந் தேதியுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்துவிட்டது. அக்னி நட்சத்திர சீசன் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாகவே அதிகமாகவே இருந்து வருகின்றது. பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் தாக்கம் இருந்து வருகின்றது.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மங்கலம் கண்மாய். இந்த மங்கலம் கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தண்ணீர் அதிகமாகவே இருந்து வந்தவுடன் இந்த கண்மாய் தண்ணீரில் ஏராளமான மீன்களும் இருந்தன அதுபோல் இந்த கண்மாய் பகுதிகளில் உள்ள மீன்களை சாப்பிடுவதற்காகவே இந்த கண்மாய் பகுதிகளில் உள்ள மரங்களில் ஏராளமான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.
இறந்து கிடக்கும் மீன்கள்
இந்தநிலையில் கோடைகால சீசனை தொடர்ந்து மங்கலம் கண்மாயிலும் தண்ணீர் அதிகமாக வற்றி குறைந்து வருகின்றது. ஓரளவு இருந்த தண்ணீரில் வாழ்ந்து வந்த மீன்களும் கோடை வெயிலின் சூடு தாங்க முடியாமல் சிறிய முதல் பெரிய அளவிலான மீன்கள் தண்ணீரிலேயே இறந்தபடி மிதந்து வருகின்றன. அதுபோல் ஏராளமான மீன்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட கண்மாய் கரை பகுதிகளிலும் இறந்த நிலையில் கிடக்கின்றன.
இதுபோன்று இறந்த நிலையில் கிடக்கும் மீன்களை சாப்பிடுவதற்காக அந்த கண்மாயில் ஏராளமான பறவைகளும் குவிந்துள்ளன. வெயிலின் வெப்பம் தாங்காமலே இந்த கண்மாய் தண்ணீரில் கிடந்த மீன்கள் தொடர்ந்து நீந்த முடியாமல் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதேபோல் ஆர். எஸ் .மங்கலம் பெரிய கண்மாயிலும் கடந்த மாதத்தில் பல மீன்கள் கோடை வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் இறந்தபடி கண்மாய் கரையில் கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.