< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
22 Jun 2023 4:16 PM IST

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரெயில் நிலையம் அருகே புட்லூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. ஏரியை சுற்றி ஆயிரக்கணக்கான வீடுகள், கோவில்கள், பள்ளிகள் அமைந்துள்ளன.

இந்த ஏரியில் விரால், கொரவை, ஜிலேபி, பணவெட்டி போன்ற மீன்கள் வளர்ந்து வருகிறது. திருவள்ளூர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் வளரும் மீன்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் ஏலம் விடுகின்றனர்.

இந்த நிலையில் மழைக்காலங்களில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மழை நீருடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேரும் கழிவுநீர் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதி மக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் இதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மாசு பட்டு தண்ணீரைக் குடிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டதாகவும், விவசாய நீரை பயன்படுத்த முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியில் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுத்து ஏரியை தூய்மைப்படுத்தி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்