< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

தினத்தந்தி
|
7 Jun 2023 3:17 AM IST

தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோட்டியால் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் ஏரி கிராமத்தின் பெரும்பகுதி தண்ணீர் தேவையை தீர்த்து வருகிறது. ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் கோட்டியால் கிராமத்தில் உள்ள ஏரியை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

தொற்று நோய் பரவும் அபாயம்

இதையடுத்து, ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக செத்து கரை ஒதுங்கி மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியிலிருந்து செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் ஏரியிலிருந்து எடுத்து சென்று அருகே உள்ள வீடுகளின் கூரைகள், மொட்டை மாடி, தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே ஏரியை தூர்வார வேண்டும். மேலும் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விஷத்தன்மை ஏற்பட்டதா?

இது மட்டுமல்லாமல் ஏரிக்கு வரும் தண்ணீர் திடீரென விஷத்தன்மை வாய்ந்ததாக மாறியதா?, மண்ணின் தன்மை மாறுபட்ட காரணத்தால் தண்ணீரில் விஷத்தன்மை ஏற்பட்டதா? அல்லது மர்ம ஆசாமிகள் யாரேனும் ஏரியில் விஷத்தன்மை உள்ள பொருட்களை கலந்தார்களா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மீண்டும் இதுபோல் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இறந்து விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்