விருதுநகர்
பள்ளப்பட்டி கண்மாயில் இறந்து மிதக்கும் மீன்கள்
|பள்ளப்பட்டி கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டி,
பள்ளப்பட்டி கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கண்மாய் பெருகியது
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியில் சென்ற ஆண்டு நல்ல மழை பெய்ததாலும், கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் முழுவதும் நிரம்பியது. இதனால் இந்த பகுதியில் சென்ற ஆண்டு நெல்லில் அதிக மகசூல் கிடைத்து.
கண்மாய்கள் பெருகியதால் இந்த பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் மீன்கள் உள்ளது. கண்மாய் தண்ணீர் வற்றி மீன்பிடிக்க ஏதுவாக உள்ள நிலையில் மீன்பிடி திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரிக்குடி அருகே பள்ளப்பட்டி பெரிய கண்மாய் உள்ளது .
செத்து மிதத்த மீன்கள்
இந்த கண்மாய் தண்ணீரில் எண்ணற்ற விரால் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கண்மாய் நீரில் விஷம் எதுவும் கலந்துள்ளதா அல்லது வேறு எதுவும் காரணமா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.