திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - ராசாயனத்துடன் கூடிய கழிவு நீர் கலந்ததால் அபாயம்
|கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏரியில் ராசாயனத்துடன் கூடிய கழிவு நீர் கலந்ததால் அதில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்த தாமரை ஏரி சுமார் 48 ஏக்கர் பரபரப்பளவு கொண்டது ஆகும். நீர் வளத்துறையின் பரமரிப்பில் உள்ள இந்த ஏரியை அதிகாரிகள் முறையாக பாதுகாக்க தவறியதால் ஏரி அழியும் தருவாயில் உள்ளது. தற்போது ஆகாய தாமரைகள் நிறைந்து உள்ள இந்த ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், சுற்றி உள்ள குடியிருப்பு நகர்களின் கழிவுகள் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் என பல தரபட்டவைகளின் சங்கமமாக தாமரை ஏரி திகழ்கிறது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, நீர்வளத்துறை மற்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகிய துறை சார்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தால் தாமரை ஏரியின் நீர் முழுமையாக ராசாயனம் கலந்த சாக்கடை நீராக மாறி விட்டது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. அத்தகைய செத்து மிதக்கும் ரசாயன விஷமாக மாறிய மீன்களை வடமாநில தொழிலாளர்கள் கொண்டு சென்று சாப்பிட்டு வருகின்றனர்.
நீர் ஆதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், செத்து மிதக்கும் மீன்களை உணவாக சாப்பிட்டு வரும் மனித உடல்களை பதம் பார்க்கும் இத்தகைய அபாய சூழல் தொடர்பாக அதகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.