சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - பொதுமக்கள் அச்சம்...!
|சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த ஏரியில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் 1,194 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் ஆந்திரா கிருஷ்ணா நீர் பங்கீடு காரணமாக 590 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் புல்லரம்பாக்கம், சதுரங்கபேட்டை, காந்தி நகர், பூண்டி, ஒதப்பை, பட்டரை பெரும்புதூர் உட்பட 45 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மதகுகள் அருகே தேங்கி நிற்க்கும் தண்ணீரில் ஆக்சிஜன் குறைந்ததால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் மதகுகள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதில் சுமார் 1 டன் மீன்கள் ஏரியில் செத்து மிதந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும், ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.