தாமிரபரணி நதியின் வடகால் வாய்க்காலில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.!
|ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் வடகால் வாய்க்கால் பகுதியில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன.
தூத்துக்குடி,
வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதியானது பொதிகை மலையில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டில் தொடங்கி தமிழ்நாட்டில் முடியும் நதி என்ற சிறப்பு தாமிரபரணிக்கு உண்டு.
இந்த நிலையில், சமீப காலமாக தாமிரபரணி தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்தது இல்லை என சமூக ஆர்வலர்கள் ஆய்வுசெய்து வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் வடகால் வாய்க்கால் பகுதியில் தண்ணீர் இல்லாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அங்குள்ள மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கிறது.
அணையில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் திறந்துவிடப்பட முடியவில்லை என்றும், நீர் வற்றியதால் வெயிலின் தாக்கம் காரணமாக மீன்கள் செத்து மிதக்கின்றன என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.