செங்கல்பட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
|சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் பிணமாக மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
பின்னர் இறந்துபோன இளம்பெண் யார் என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்தபோது அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள பெரிய தெருவை சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மகள் தீபிகா (வயது 18) என்பது தெரியவந்தது. தீபிகா தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. தீபிகா அடிக்கடி செல்போனில் பேசுவதை அவரது தாய் கண்டித்தாக கூறப்படுகிறது.
இதனால் தீபிகா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.