வேலூர்
சதுப்பேரி ஏரியில் பெண் பிணம்
|சதுப்பேரி ஏரியில் பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சதுப்பேரி ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த பெண் குறித்து கொணவட்டம், சதுப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் விசாரித்தனர். அதில், ஏரியில் பிணமாக மிதந்த பெண் கொணவட்டம் ரோஜாமேட்டுத்தெருவை சேர்ந்த பரிதாபானு (வயது 30) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தந்தையுடன் வசித்து வந்ததும், கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அவர் சதுப்பேரி ஏரியில் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. பரிதாபானுவின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. அவர் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.