சென்னை
மதுரவாயல் அருகே பூட்டிய வீட்டுக்குள் வங்கி அதிகாரி பிணமாக மீட்பு
|மதுரவாயல் அருகே பூட்டிய வீட்டுக்குள் வங்கி அதிகாரி பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரவாயல்,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் பிரசாத் தாஸ் (வயது 45). இவர், சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்து கிஷோர் பிரசாத் தாஸ் வெளியே வரவில்லை. வீடு பூட்டியே கிடந்தது. இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பூட்டிய வீட்டுக்குள் கிஷோர் பிரசாத் தாஸ் பிணமாக கிடந்தார். அவர் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ேமலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூட்டிய வீட்டுக்குள் கிஷோர் பிரசாத் தாஸ் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.