சென்னை
புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம்
|சென்னை புழல் சிறையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தை நேற்று தமிழக சட்டம், நீதி சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் சிவில் தொண்டு நிறுவனம் சார்பில் கைதிகளுக்கு இடையே கிராமிய விளையாட்டுப்போட்டிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, தலைமை இடத்து டி.ஐ.ஜி. ஆர்.கனகராஜ், சென்னை சரக டி.ஐ.ஜி. முருகேசன், சிறை சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், ஆர்.கிருஷ்ணராஜ், சிவில் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம விளையாட்டில் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உறியடித்தல், பந்து நகர்த்தல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.