< Back
மாநில செய்திகள்
விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை; வீடு இடிந்தது-சாலைகளில் திடீர் பள்ளம்
திருச்சி
மாநில செய்திகள்

விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை; வீடு இடிந்தது-சாலைகளில் திடீர் பள்ளம்

தினத்தந்தி
|
16 Oct 2023 1:42 AM IST

விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் வீடு இடிந்தது. சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

பலத்த மழை

திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய மழை நேற்று காலை 5.30 மணி வரை நீடித்தது. இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் திருச்சி மாநகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது.

பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. மத்திய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வைத்து அகற்றினார்கள். திருச்சி மாநகரில் பல இடங்களில் போதிய மழைநீர் வடிகால் இல்லாததாலும், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதாலும் நேற்று முன்தினம் ஒரு நாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு சாலைகள் மோசமான நிலைக்கு மாறின.

புதிய சாலைகளில் பள்ளம்

பொன்மலை, விமான நிலைய பகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட 3-ம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக நன்றாக இருந்த சாலைகள் எல்லாம் பள்ளம் தோண்டப்பட்டு சேதமாகி உள்ளன. இதேபோல் வயலூர் சாலையிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை. சில இடங்களில் பாதாள சாக்கடை குழிகள் மூடப்பட்டாலும், வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுப்பதற்காக பணிகளை அப்படியே விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

ஒரு நாள் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெளியே எடுத்து வர முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடை பணி முடிந்து புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலை அமைக்கும்போது, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், தற்போது பெய்த மழைக்கு மண் இளகி பெரும்பாலான பகுதிகளில், சாலையின் நடுவில் சிறிய அளவில் பள்ளம் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன.

வீடு இடிந்தது

மேலும் திருச்சி ஜே.கே.நகர், ராஜகணபதி நகர், திருமுருகன் நகர், கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகர், இந்திராநகர், வெங்கடேஷ்வராநகர், ரன்வேநகர், ஐஸ்வர்யா எஸ்டேட் பகுதிகளில் சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் காலிமனைகளில் தேங்கியது. மேலும் தொடர் மழை காரணமாக திருச்சி பீமநகரில் பண்டரிநாதபுரத்தில் தட்டுரிக்ஷா ஓட்டிவரும் குழந்தைவேல் (வயது 60) என்பவது வீடு இடிந்து விழுந்தது. இதேபோல் ராஜா காலனியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்